நெமிலி, ஜூலை 11:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணை ஆட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். நெமிலி தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

அப்போது, தாய் உயிரிழந்த நிலையில் தந்தையின் ஆதரவும் இல்லாமல், ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மாணவர்களான தாரணி, சூர்யா, விக்கி ஆகியோர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மூன்று மாணவர்களையும் அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

மாணவர்களிடம் நேரில் விசாரணை நடத்திய துணை ஆட்சியர் ரமேஷ், அவர்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், “உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறி, தனது செல்பேசி எண்ணையும் மாணவர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து, அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களில் ஆதரவற்ற நிலையில் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் துணை தாசில்தார்கள் சரஸ்வதி, சுந்தரம், மருதாச்சலம், வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் நளினி, கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *