சமூகம் சார்ந்த நலப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் அமைப்பின் முதலாண்டு நிறைவு விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது.
அவினாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜெண்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற ,
நிகழ்ச்சியில் ரொட்டேரியன் மகேஸ்வரன் தலைவராகவும், ரொட்டேரியன் சரவணன் செயலாளராகவும், ரொட்டேரியன் அருண்பிரசாத் பொருளாளராகவும் பதவியேற்று, சமூக நலப் பணிகளை மேலும் விரிவுபடுத்த உறுதியேற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு சமூக சேவைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கே.கே. புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டதுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
மேலும், போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற இல்லத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பராமரிப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, மனிதநேய சேவையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகளான ரொட்டேரியன் காட்வின், சுவாமிநாதன், ராமகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் குட்டப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சமூக நலப் பணிகளில் ரோட்டரியின் பங்களிப்பை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.