தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், சூரியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கிப்பாளையம் பகுதியில், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தச் சாலையை தினமும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அரசு பேருந்துகள் மற்றும் பனியன் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளும் இச்சாலையில் தினந்தோறும் இயக்கப்படுகின்றன.
வேங்கிப்பாளையம் வழியாகச் செல்லும் இந்தச் சாலை, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளதால் வாகனப் போக்குவரத்து அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால், சாலையின் தார் உரிந்து ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடப்பதால் வாகனங்களை இயக்குவதும், பொதுமக்கள் நடந்து செல்வதும் மிகவும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த தார் சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான நிலையில் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.