தேனி, ஜூலை 14: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பெற்றுக் கொண்டார்.
முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட கலெக்டர், அவற்றின் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நான்கு பயனாளிகளுக்கு ரூ.36,789 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள், ரூ.9,000 மதிப்பிலான தம்மோடு வீல் சேர், ரூ.594 மதிப்பிலான எல்போ ஊன்றுகோல் மற்றும் ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.