தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் மெயின் ரோடு, முனியசாமி கோவில் சந்து பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி, சாலை சேதமடைந்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதி பிரச்சினைகளை நேரில் பார்வையிட வேண்டும் என பாஜக மாவட்ட நிர்வாகியும் வழக்கறிஞருமான நாகராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு மேயர் ஜெகன் சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் நாகராஜனிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர், முனியசாமி கோவில் சந்து பகுதியில் கழிவுநீர் வடிகால் (கான்) இணைப்பு உடனடியாக அமைக்கப்படும் என்றும், தாமோதரன் நகர் மெயின் ரோட்டுடன் இணைக்கும் புதிய சாலை அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அப்போது, இன்னும் இரண்டு வாரங்களில் முனியசாமி கோவில் கொடை விழா தொடங்கவுள்ளதால், அதற்கு முன்பாக பணிகளை முடித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஒப்பந்ததாரரை உடனடியாக வரவழைத்த மேயர் ஜெகன், மறுநாளே பணிகளை தொடங்கி, 15 நாட்களுக்குள் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட்டார். கோவில் திருவிழாவிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேயரின் உத்தரவின்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை வைக்கப்பட்ட 12 மணி நேரத்திலேயே பணிகள் தொடங்கியதற்கு அப்பகுதி மக்கள் மேயர் ஜெகனுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து மேயர் ஜெகன் கூறுகையில், “பொதுமக்கள் யார் கோரிக்கை வைத்தாலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இந்த ஆய்வின்போது, பாஜக மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, போல்பேட்டை பகுதி திமுக நிர்வாகி ஜேஸ்பார், திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *