தேனி, ஜூலை 18:
தமிழகம்–கேரளா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையான கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலை இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா சாலையை திறந்து வைத்தார்.
கம்பம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைச்சாலை கேரளா மாநிலத்துடன் முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டு வருகிறது. மலைப்பகுதியாக இருப்பதால் சாலை அடிக்கடி சேதமடைவது வழக்கமாக உள்ள நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மலைச்சாலையில் உள்ள ‘தண்ணீர் ஊற்று’ பகுதியில் சிமெண்டு சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இருபுறங்களிலும் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த ஜூன் 8ஆம் தேதி தொடங்கப்பட்டன. முக்கிய போக்குவரத்து சாலையாக இருப்பதால், பணிகள் தினமும் காலை முதல் இரவு 10 மணி வரை ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.
பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் கம்பம் மெட்டு வழியாக கேரளா மாநிலத்திற்கு செல்லும் அனைத்து வகை வாகனங்களின் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியது. இதன்மூலம் வண்டன் மேடு, தூக்குப்பாலம், புளியன்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும், அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும், ஜீப் சேவைகள், அரசு பேருந்துகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குமணன், உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் வைரகுமார், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் ஏ.பி. அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.