தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அரசின் கொள்கைக்கும் செயல்பாட்டிற்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு. பி.எம். சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்தது.
அப்படியிருக்க, தற்போது 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவது எந்த நோக்கத்திற்காக என்பது மக்களிடையே கேள்விகளை எழுப்புகிறது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே அரசின் கொள்கை என்றால், புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இலக்கு என்றால், புதிய பிராண்டுகள் மூலம் மதுபான விற்பனையை விரிவுபடுத்துவது யாருடைய நலனுக்காக?
ஏற்கனவே மதுப்பழக்கத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறை, சாலை விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் மதுபோதையும் ஒரு முக்கியக் காரணியாக காவல்துறை விசாரணைகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல், மனநல மற்றும் சமூக ரீதியிலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது சமூகப் பொறுப்புள்ள அரசின் செயலாக கருத முடியாது.
ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்று கூறிவிட்டு, மறுபுறம் 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துகிறோம் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் இரட்டை நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக மக்களின் நலனில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மது விற்பனையை படிப்படியாகக் குறைத்து, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து, மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை உறுதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, டாஸ்மாக் கடைகளில் 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மது விற்பனையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு, குடும்பங்களின் அமைதி மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி, எம்.ஏ., எம்.எல்., வலியுறுத்தியுள்ளார்.