திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் அப்பகுதி மக்கள் ரயில்வே தண்டவாளத்தை நடந்து கடந்து சென்று வந்தனர். இவ்வாறு தண்டவாளத்தை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையை இன்று காலை முதல் மூடினர்.
இதனால் அண்ணாமலை நகர், சிவசக்தி நகர், ராஜ சண்முக நகர், ராஜாஜி நகர், வெற்றி நகர், பாலகிருஷ்ண நகர், கார்கில் நகர் மற்றும் சார்லஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த பாதை மூடப்பட்டதால், பொதுமக்கள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டனர். மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களுக்குச் செல்லவும் இந்த ரயில்வே பாதையை கடந்து செல்வதே மக்களின் வழக்கமாக இருந்து வந்த நிலையில், பாதை மூடப்பட்டதால் கடும் அவதி ஏற்பட்டது.
இதையடுத்து, பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தடுப்புகளைத் தாண்டி செல்ல முயன்றபோது, மேலே ஏறி கீழே விழும் அபாயகரமான சூழலும் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ரயில்வே அதிகாரிகளுடன் செல்பேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், ஒரு நபர் மட்டும் நடந்து செல்லும் வகையில் தற்காலிக பாதை அமைக்க அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஒரே நபர் நடந்து செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த பாதையை பயன்படுத்தி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றனர்.