பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில்,போத்தனூர் சாரதா மில் சாலையில் பொதுமக்களிடையே “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் எம். முகமது ஹாரூன் தலைமையில் நடைபெற்ற ,இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் எச். முகமது ஆரீஃப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
மேலும், பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முகமது ஆரீஃப், “கர்மவீரர் காமராஜர் நேர்மை, எளிமை மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய தலைவர்.அவரது பிறந்தநாளில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதோடு, ‘லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
ஊழலற்ற, நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் உறுதி ஏற்க வேண்டும். அதேநேரத்தில், கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதால், மாணவர்கள் நன்றாக கல்வி கற்று நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் பஷீர், குறிச்சி சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய்தீன், ஹாஜா, மாவட்ட சிறுபான்மை துறை நிர்வாகிகள் முகமது ஈஷா, முகமது அசார், ஜெபராஜ், ஜியாவுதீன், ரியாஸ் அஹமது, சுரேஷ், ராஜா, ஷேக் தாவூத், நிஜாம், முகமது அலி மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று கையெழுத்திட்டு, லஞ்சமற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.