தேனி மாவட்டம்: சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, போட்டித் தேர்வுகளுக்காக பயின்று வரும் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடினார். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட கற்றல் வளங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நூலகத்தின் வருகைப் பதிவேடு, உறுப்பினர்களின் எண்ணிக்கை, நூலக புத்தகப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், பொறுப்பு நகராட்சிப் பொறியாளர் சரவணக்குமார், மின்சார வாரிய கோட்டப் பொறியாளர் சந்திரமோகன், உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலசண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.