கல்பாக்கம், ஆக. 18: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்மொழி வளர்ச்சிக்கு பல்வேறு அரும்பணிகளை ஆற்றிய முனைவர் கோ. விசயராகவனுக்கு “சிறந்த தமிழ்த் தொண்டர்” விருது வழங்கப்பட்டது.

நாட்டின் 80-ஆவது விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைமாமணி விஜிபி சந்தோசம் தனது திருக்கரங்களால் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் விஜிபி செல்வராஜ், விஜிபி ராஜாதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் சுமார் 2,000 அரிய நூல்கள், பதிப்பு நூல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் வெளியிடப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார். மேலும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மதிப்பில் புதிய நூலகம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், ஆய்வறிஞர் விருந்தினர் விடுதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தினார்.

மாணவர்கள் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடர அரசு ஊக்கத்தொகை பெறுவதற்கும் அவர் வழிவகுத்தார். கல்வெட்டு, சுவடிகள், பட்டயப் படிப்பு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் படிப்புகளையும், ஆய்வு இருக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளையும் உருவாக்கி தமிழ் ஆய்வை ஊக்குவித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் 25-க்கும் மேற்பட்ட எம்.பில். மாணவர்களும், 12-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வாளர்களும் உருவாகினர்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணியாற்றியபோது, தமிழுக்கான விருதுகளின் எண்ணிக்கையை 20-இல் இருந்து 80-ஆக உயர்த்திய பெருமையும் அவருக்கு உண்டு. மாணவர்களுக்காக “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை”, மாவட்டந்தோறும் தமிழ் மாணவர் மன்றம், இலக்கியப் பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான நிதியுதவியை உயர்த்தியதுடன், பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார். நிதியுதவி பெறுவதற்கு தடையாக இருந்த வருமான வரம்பை உயர்த்தியதோடு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் சிறப்பாக நடைபெற நேரடியாகச் சென்று பணிகளை ஒருங்கிணைத்தார்.

ஓய்வுபெறும் முன்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியபோது, பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி வெளியிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். மாணவர்களுக்கான அகராதி, ஆட்சிமொழி அகராதி உள்ளிட்ட பல்வேறு அகராதிகளும் வெளியிடப்பட்டன.

குறிப்பாக, “சொற்குவை” திட்டத்தில் இருந்த தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 15 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி, அவற்றை சொற்குவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது அவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாக தமிழ் அறிஞர்களால் பாராட்டப்படுகிறது.

தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் நிர்வாகப் பயன்பாடு, மாணவர்களுக்கான தமிழ் சார்ந்த திட்டங்கள் என பல்வேறு தளங்களில் ஆற்றிய அளப்பரிய பணிகளைப் பாராட்டி, முனைவர் கோ. விசயராகவனுக்கு விஜிபி உலகத் தமிழ் சங்கம் சார்பில் “சிறந்த தமிழ்த் தொண்டர்” விருது வழங்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *