மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சார்பில் காரிக்கோட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் 7 நாள் சிறப்பு முகாம் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 2-ந் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் மாணவிகள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களிலும் சமூக சேவையில் மாணவிகள் ஈடுபடும் வகையில், கிராமப்புறங்களில் கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்வது, மரக்கன்றுகள் நடுவது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதைப்பழக்கத்திற்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக காரிக்கோட்டை காரியழகர் அய்யனார் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் மாணவிகளுக்கு உடல் பரிசோதனை செய்தனர். உடல்நலம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையானவர்களுக்கு முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியை முனைவர் எஸ். ஜெயந்தி தலைமை வகித்தார். NSS மாவட்ட தொடர்பு அலுவலர் கமலப்பன் முன்னிலை வகித்தார். NSS திட்ட அலுவலர் எஸ். உமாராணி வரவேற்று பேசினார்.
முதுகலை ஆசிரியர்கள் ஆர். மகேஸ்வரி, ஏ. ரோஸ்லின் மேரி, வி. ஹேமலதா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விடுமுறையிலும் மாணவிகள் கிராம மக்களுக்காக மேற்கொண்டு வரும் மருத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.