சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததாகவும், இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் தாழங்குப்பம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு வெளியேற்றத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மீன்கள் செத்து மிதந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஆறு மாத காலத்திற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். சுந்தர்ராஜ், சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். லோகநாதன், செயலாளர் செல்வானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். முத்துசாமி, பகுதி செயலாளர் எஸ். கதிர்வேல், வெங்கட் ஐயா மற்றும் சிஐடியு தியாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை நிரந்தரமாக தடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *