கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த சில நாட்களாக கோவில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் மற்றும் வேத பாராயணங்கள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட சுமார் 2 ஆயிரம் தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்தபடி கோவில் விமான கோபுரத்தை வலம் வந்தனர்.

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து, வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.புனித நீர் கலசங்களின் மீது ஊற்றப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் ஆலாந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் ஆயிரக்கணக்கான சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று காமாட்சி அம்மனுக்கு படைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நடைபெற்ற மகா அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *