மன்னார்குடி

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு AITC மாவட்ட செயலாளர் K. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். LPF-ஐ சேர்ந்த பா. ரவிகுமார், CITU-வை சேர்ந்த P.N. லெனின், TGTEU-வை சேர்ந்த K. அருள்மணி, BMS பொதுச்செயலாளர் C. கோபு, SC-ST சங்கத்தை சேர்ந்த G. ரமேஷ், விற்பனை சங்கத்தை சேர்ந்த G. ராமு, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த P. ராஜா, LLF-ஐ சேர்ந்த திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பணிச்சூழல், ஊதியம், பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

சிறப்புரையாற்றிய நிர்வாகிகள்

மாநாட்டில் AITUC சார்பில் R. சந்திரசேகர ஆசாத், CITU சார்பில் M.K.N. அனிபா, TGTEU மாநில துணைத் தலைவர் T. முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் T. நாகராஜன், SC-ST சங்கத்தை சேர்ந்த Dr. M. விஜய் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிரந்தரம் இல்லாத நிலை நீடிப்பது வேதனைக்குரியது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

23 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிரந்தரம் இல்லை

தொடர்ந்து AITUC மாவட்ட செயலாளர் R. சந்திரசேகர ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“டாஸ்மாக் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வருகிற 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். குறிப்பாக டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இன்றளவும் பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலை உள்ளது.

பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எங்களது சங்கத்தின் சார்பில் மொத்தம் 13 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் பணியாளர்களின் பணி என்பது பல்வேறு வகையில் கடினமான பணியாக உள்ளது. காவல்துறை மற்றும் ராணுவத்துறையினரைப் போன்று பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. போதிய விடுமுறை இல்லாமல் பணியாற்றும் சூழலும் உள்ளது. எனவே, நீண்டகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வருகிற 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றார்.

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம்

மாநாட்டில், வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்களையும் திரளாக பங்கேற்கச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், போராட்டத்தை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துவது, பணியாளர்களிடம் கோரிக்கைகள் குறித்து விளக்குவது, போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளித்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், வருகிற 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதில் அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதியாக இருப்பதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *