மன்னார்குடி., ஆக. 25

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடை நீரில் கலந்து செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு நீண்ட தூரம் குழாய்கள் அமைக்கப்பட்டு, கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பல்வேறு இடங்களில் பழுதடைந்து, பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழாய் வழித்தடங்களில் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதால், அவ்வப்போது அதிர்வு ஏற்பட்டு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், மன்னார்குடி அருகே இரட்டைப்புலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக அதிக அழுத்தத்துடன் குடிநீர் வெளியேறி, சாலையோரம் மற்றும் அருகிலுள்ள வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் சாக்கடை நீருடன் கலந்து ஓடி வருகிறது.

இதனால், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய குடிநீர் பெருமளவில் வீணாகி வருவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. குறிப்பாக, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால், வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், அப்பகுதியில் சாக்கடைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரி சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை நிரந்தரமான சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வீணாகி வருவதாகவும், தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் பயன்பாட்டிற்கு வராமல் சாக்கடை நீரில் கலந்து வீணாகி வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு புறம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம், சாலை மறியல் என உள்ளிட்ட பல்வேறு முறையில் போராடி மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், குழாய் உடைப்பு காரணமாக குடிநீரின் தரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, தற்காலிகமாக மட்டும் இல்லாமல் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் குழாய்களை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உடைந்துள்ள குடிநீர் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், பழைய மற்றும் பலவீனமடைந்துள்ள குழாய்களை கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோடைக்காலம் மற்றும் குடிநீர் தேவை அதிகரிக்கும் காலங்களில் இதுபோன்ற குழாய் உடைப்புகளால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் முழு குழாய் வழித்தடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக இருப்பதால், குழாய் உடைப்பு குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, குடிநீர் வீணாவதைத் தடுத்து, தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *