மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டாரங்களில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மதுராந்தகம் ஹைவேயில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது.
மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மாலோலன் கலைக்கல்லூரி, சுபம் கல்வியல் கல்லூரி, ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சந்தோஷி கல்விக் குழுமங்கள் மற்றும் செய்யூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் காவல்துறை சார்பில் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். மதுராந்தகம் டிஎஸ்பி தீபக் ரஜினி, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் கலந்து கொண்டு, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், கல்லூரிகளுக்கு வெளியே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.