மன்னார்குடி., ஆக.25

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பங்குடி ஆர்ச் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி–மன்னார்குடி–வேதாரண்யம்–திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கமலபுரம், மேலபனையூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் சில நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், நீர்நிலைகள் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பனையூர் ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அனைத்து குளங்களையும் முறையாக அளவீடு செய்து பாதுகாக்க வேண்டும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும், செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பங்குடி ஆர்ச் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஜி.கல்யாணசுந்தரம், எஸ்.ஜான் கென்னடி, ஆர்.பாலசுப்பிரமணியம், ராஜேஷ், ஆர்.பாஸ்கர், ஜி.தமிழ்ச்செல்வன், பி.ஹாஜாமைதீன், எஸ்.ரவிச்சந்திரன், அறிவழகன் உள்ளிட்ட பனையூர் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் காரணமாக திருச்சி, மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பத்மாவும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக திருச்சி–மன்னார்குடி–வேதாரண்யம்–திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *