தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 மூலம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் விவசாயிகளின் வயல்வெளிகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அரசு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது.
எனவே, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தரும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களைத் திட்டத்தில் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தவும் அதேபோல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஒருவர் கலந்து கொண்டு, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.