எண்ணூர்: எர்ணாவூர் அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் டிரெய்லர் லாரியின் பின்பக்க டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் லாரிகளை பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கலைவாணி என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் டிரெய்லர் லாரி பழுதுபார்ப்பதற்காக மெக்கானிக் கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை லாரியின் பின்பக்க டயரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து எண்ணூர் மற்றும் மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் டயரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ லாரியின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் லாரியின் டயர் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *