போச்சம்பள்ளி ஆக 25, போச்சம்பள்ளி அருகே ஒரே வளாகத்தில் உள்ள மூன்று கோயில்களில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய இரண்டு வாலிபர்களை, ‘எஃப்.ஆர்.எஸ்’ (Face Recognition System) செயலி மூலம் நாகரசம்பட்டி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமயோசிதமாகச் செயல்பட்டு திருடர்களைப் பிடித்த காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஒரே வளாகத்தில் 3 கோயில்களில் கொள்ளை:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் காளியம்மன், திரௌபதி அம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் இந்த கோயில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், அம்மன் சிலைகளின் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்ளையடித்துத் தப்பினர்.

ரோந்துப் பணியில் சிக்கிய பைக்:
அன்று இரவு நாகரசம்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் மற்றும் தலைமை காவலர் சிவன் ஆகியோர் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருதேரி ஆற்றங்கரை ஓரமாக அனாதையாகக் கைவிடப்பட்ட நிலையில் ஒரு இருசக்கர வாகனம் கிடப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் அதனை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

ஸ்டேஷனுக்கே வந்த திருடர்கள்:
சிறிது நேரத்தில் இரண்டு இளைஞர்கள் காவல் நிலையம் வந்து, அந்த இருசக்கர வாகனம் தங்களுடையது எனக் கூறி திரும்பக் கேட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த தலைமை காவலர் சிவம், வண்டியை கேட்டு வந்த இருவரையும் ‘FRS’ (முக அங்கீகார தொழில்நுட்ப) ஆப் மூலமாகப் புகைப்படம் எடுத்துச் சோதித்தார்.

FRS ஆப் கொடுத்த க்ளூ – அதிரடி கைது:
சோதனையில், அந்த இளைஞர்களில் ஒருவனான சூரியன் (என்கின்ற சூர்யா) மீது ஏற்கனவே காவேரிபட்டினம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவேரிப்பட்டணம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு வாலிபர்களையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பித்தளைப் பொருட்கள் முழுமையாக மீட்கப்பட்டன.

எஸ்பி அனிதா ஐபிஎஸ் பாராட்டு:
தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தி, காவல் நிலையம் தேடி வந்த திருடர்களைச் சாதுரியமாகக் கைது செய்த நாகரசம்பட்டி காவலர் சிவத்தின் பணியைப் பாராட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அனிதா ஐபிஎஸ் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார். எஸ்பியிடம் பாராட்டு பெற்ற காவலருக்குக் காவல் நிலைய வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *