காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்.
காங்கேயம்.
ஊதியூர்–குண்டடம் சாலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
குண்டடம் சாலையில் உள்ள மலைக்கண்ணிமார் கருப்பண்ணசாமி கோயில் அருகே மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் நேற்று முன்தினம் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சுமார் 7 டன் அளவிலான ஓடைக்கல் மண் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது.
அதிகாரிகள் சோதனை செய்தபோது, லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து லாரி மற்றும் அதில் இருந்த கிராவல் மண்ணை ஊதியூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்துச் செல்வோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.