கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் கோவை ஜிஓடி சங்கத்தின் சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் சீடர் மந்திர ராஜ் கௌதம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,கோவைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறைவனின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவனின் திருநாமங்களை உச்சரித்து, உலக நலன், குடும்ப நலம் மற்றும் அனைத்து மக்களின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திர ராஜ் கௌதம், மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான சவால்கள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எதிர்கொள்ள இறை நம்பிக்கையும் மன அமைதியும் மிகவும் முக்கியம் என தெரிவித்தார். இறைவனின் நாமங்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் மனதில் நேர்மறையான எண்ணங்களும் நம்பிக்கையும் ஏற்படும் என்றும் கூறினார்.
குறிப்பாக, “ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே”எனும் பகவானின் திருநாமத்தை பக்தியுடன் உச்சரித்து வழிபடுவதன் மூலம் மனக்கவலைகள் நீங்கி, வாழ்க்கையில் நம்பிக்கையுடன் முன்னேற முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஆழ்வார்களின் பாசுரங்களில் இடம்பெற்றுள்ள இறை பக்தி மற்றும் இறை நாமத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த மந்திர ராஜ் கௌதம், பக்தர்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் இறை நாமத்தை உச்சரிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் பக்தர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இறைவனின் திருநாமங்களை உச்சரித்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வு நிறைந்த சூழல் நிலவியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பகவதி ஸ்டில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வேணுகோபால், ஜெயந்தி மற்றும் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்கோவில் அர்ச்சகர் சிவஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.