சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பார்த்தசாரதி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிறுவனத் தலைவர் ஸ்ரீ பி. ஸ்ரீராம் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் ஏ. ரமேஷ் வரவேற்புரைற்றினர்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 12-வது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக C-DAC நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மகேஷ் எத்திராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

மதியம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வியூகம் மற்றும் நிர்வாகத் தலைவர் என். முத்துலட்சுமி மற்றும் ZenteiQ AI Tech Innovations நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் சசிகுமார் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தனர். இதன் மூலம், நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில், 10 தரவரிசைப் பெற்ற மாணவர்கள் உட்பட மொத்தம் 900 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிறுவனத் தலைவர் ஸ்ரீ பி. ஸ்ரீராம் பேசியது: இந்தியாவின் உழைக்கும் மக்களின் சராசரி வயது தற்போது 28 ஆக உள்ளது. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் இது 50 வயதாக அதிகரிக்கும். எனவே, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டுமானால், அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு; இதை நாம் ஒருபோதும் தவறவிடக் கூடாது.

C-DAC நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மகேஷ் எத்திராஜன்: இன்றைய வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தில், நீங்கள் வெறும் பணியாளராக மட்டுமின்றி, தொழில்முனைவோராகவும் உருவாகலாம். செமிகண்டக்டர் துறையில் ஏராளமான வாய்ப்புகளும், அரசின் பல்வேறு உதவிகளும் கிடைக்கின்றன. நீங்கள் CIT கல்லூரியின் உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, நீங்களும் முன்னேறுவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்று பேசினார்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வியூகம் மற்றும் நிர்வாகத் தலைவர் என். முத்துலட்சுமி அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வருவதால், வேலைவாய்ப்புகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் தங்களது எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மாணவர்கள் இப்போதே சிந்திக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவால் அனைத்து வேலைகளையும் முழுமையாகச் செய்ய முடியாது. AI-யால் செய்ய முடியாத பணிகளையும், மனிதர்களால் மட்டுமே சிறப்பாகச் செய்யக்கூடிய பணிகளையும் மாணவர்கள் அடையாளம் கண்டு, அதற்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

ZenteiQ AiTech Innovations நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் சசிகுமார் கணேசன்: மாணவர்கள் தங்கள் வாழ்வில் மூன்று முக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக, எப்படிக் கற்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நல்ல நண்பர்களையும், தங்களுக்கு ஏற்ற நல்ல சூழலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது; தொடர்ந்து புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 12-வது பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்தது. விழாவின் இறுதியில், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில், CIT நிறுவனத்தின் செயலாளர் ஸ்ரீதேவி ஸ்ரீராம், CIT புத்தாக்க இயக்குநர் கோகுலகிருஷ்ணன், CIT மூலோபாய மேம்பாட்டு இயக்குநர் பாலகிருஷ்ணன், CIT புல முதன்மையர் டாக்டர் வி. ஸ்ரீனிவாச ராவ் மற்றும் CIT தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் ஜே. வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *