ராகுல் காந்தி மீது வழக்கு: பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து தாராபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிட்டுசாமி தலைமை வகித்தார். முக்கிய தொகுதி பார்வையாளர் சங்கர் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகுநாத் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின்னர், மாநாடு நடைபெற்ற இடத்தையும், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமர்ந்திருந்த இடத்தையும் பாஜக மற்றும் சங்கப் பரிவார் அமைப்பினர் கங்கை நீரைக் கொண்டு கழுவியதாகக் கூறி, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் சங்கப் பரிவார் அமைப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ராகுல் காந்தி மீது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடைபெறுவதாகக் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒன்றிய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி உள்ளிட்ட மாவட்ட, வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.