தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காவிட்டால்-செப்டம்பர் 8-ல் 5,000 விவசாயிகள் சாலை மறியல்! ஆடு, மாடுகளுடன் களம் இறங்கப் போவதாக எச்சரிக்கை!..
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி, 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி கோவை–ஈரோடு–திருப்பூர்–தாராபுரம் இணைப்புச் சாலையில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உப்பாறு அணை, பனமரத்துப்பாளையம், தொப்பம்பட்டி, கெத்தல்ரேப், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த இந்த அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
உப்பாறு அணையைச் சுற்றியுள்ள சுமார் 6,300 ஏக்கர் நேரடி பாசன நிலங்களும், மறைமுகமாக பயன்பெறும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. தென்னை, பருத்தி, சூரியகாந்தி, வெங்காயம், மிளகாய், முருங்கை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகள் அறவழிப் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும், முத்தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் பிரச்சினை குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பொறுப்பில் உள்ள நீர்வளத்துறை பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பனிடமும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜிடமும் பிரச்சினை குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதன்பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து நாட்கள் கடந்தும் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கு உரிய பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியும், மனவேதனையும் அடைந்துள்ள விவசாயிகள், இனியும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை தள்ளிப்போடப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, காங்கேயம் சாலையில் உள்ள தேன்மொழி அம்மன் கோவில் மண்டப வளாகத்தில் நடைபெற்ற உப்பாறு பாசன விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் வேலு சிவகுமார், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை, ஈரோடு, திருப்பூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான காங்கேயம் பிரிவில், ஆடு, மாடுகளுடன் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
மேலும், “இந்த முறை உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பேச்சை இனிமேல் விவசாயிகள் கேட்கத் தயாராக இல்லை,” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றால், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படலாம் என்றும் விவசாயிகள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன; கால்நடைகள் தவிக்கின்றன. இனியும் பொறுமையாக இருக்க முடியாது. உப்பாறு அணைக்கு தண்ணீர் வேண்டும்; இல்லையெனில் சாலை மறியல் போராட்டம் உறுதி” என விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.