தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கோட்டத் தலைவர் வெங்கடசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் தில்லையப்பன் போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

சாலைப் பணியாளர்கள் சாலைப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகள் மற்றும் தளவாடங்களை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முறையாக வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், சாலைப் பணியாளர்களின் ஊதியத்தில் குடும்ப நல சிறப்பு சேமநல நிதிக்காக கூடுதலாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வுபெற்ற சாலைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வட்டியுடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்களுக்கான முதுநிலைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் சமநீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். அடுக்குமுறை முதுநிலைப் பட்டியலை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கோட்டத் துணைத் தலைவர் செல்வகுமார், மாவட்ட இணைச் செயலாளர் மேகலிங்கம், கோட்ட இணைச் செயலாளர்கள் பொன்னரசு, மணிமொழி, பொதுச் செயலாளர் அம்சராஜ், கோட்டப் பொறியாளர் சிவராசு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *