செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் தணிகைவேலுக்கு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

தான் கல்வி பயின்ற அதே பள்ளியில் தற்போது ஆசிரியராக பணியாற்றி வருவது தணிகைவேலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். கடந்த பத்து ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளித்து, பல மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார்.

மேலும், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தும், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பின் மூலமும் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

அவரது மகள் ஆராதனா, அச்சிறுப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவரது மகன் தமிழ்செல்வன் ஏழாம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றதையொட்டி தணிகைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குவதுடன், குறைந்தபட்சம் ஒரு விளையாட்டையாவது ஊக்குவிக்க வேண்டும். தங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் உயர் கல்வி வரை தொடர்ந்து படிப்பதற்கு முன்னாள் மாணவர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மேலும், மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், அறிவியல் மன்றம், இலக்கிய மன்றம், அறிவியல் கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களை மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றியாளர்களாக உருவாக்க முடியும்.

இந்திய திருநாடு வல்லரசு நாடாக மாறவும், தமிழ்நாடு பொருளாதார முன்னேற்றத்தில் முதன்மை மாநிலமாக வளரவும் அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் முக்கியமானது. அனைத்து முன்னாள் மாணவர்களும் சிறு துளியாக உதவினால், மாணவர்களின் முன்னேற்றம் பெருவெள்ளமாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *