நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சாதி வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரை, திடுமல் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி என்பவர் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசி, தாக்கியதாக தமிழ்ப்புலிகள் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல நாட்களாகியும் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை எனக் கூறி, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னரும், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பாதிக்கப்பட்ட முருகேசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்கையும், தமிழ்ப்புலிகள் கட்சியினருக்கு எதிராக போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், முருகேசன் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *