தேனி, செப். 8: தேனி மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள், பள்ளிகளின் தேவைகள், சமையல் கூடங்கள் மற்றும் உணவு தயாரிப்பு தொடர்பான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திட்டத்தை சிறப்பாகவும், தடையின்றியும் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் எஸ். பார்கவி, போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர், சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் ரா.து. கோபிநாத், கம்பம் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், கூடலூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.