மன்னார்குடி., செப்.09

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியரும், என்சிசி கப்பல் படை அதிகாரியுமான முனைவர் எஸ். அன்பரசு, திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், ஆசிரியர் எஸ். அன்பரசுவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார்.

ஆசிரியர் அன்பரசு, தனது பணிக்காலத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி வழங்கி வருவதுடன், பள்ளியின் கல்வி வளர்ச்சியிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். மேலும், புதிய பாடத்திட்டம் மற்றும் நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

கல்விப் பணியுடன் சமூகப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர், ஜேசிஐ, மன்னார்குடி தமிழ்ச் சங்கம், மன்னையின் மைந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதுவரை 54 முறை ரத்த தானம் செய்து சமூக சேவையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் எஸ். அன்பரசுவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பிலும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

விருது பெற்ற ஆசிரியர் அன்பரசுவை முதன்மைக் கல்வி அலுவலர் அ. சுகப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் தி. ராஜேஸ்வரி, பள்ளித் தாளாளர் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியர் எம். திலகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *