தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தாராபுரம்–உடுமலைப்பேட்டை சாலையில் தனியார் பள்ளி அருகே நேற்று காலை சுமார் 8 மணியளவில் குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையில், பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரியான தங்கவேல் (65) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார். அவரது காரை நிறுத்திய பறக்கும் படையினர், காரை முழுமையாக சோதனை செய்தனர். சோதனையின்போது காரின் மறைவான பகுதியில் ரொக்கப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாராபுரம் தேர்தல் துணை அலுவலரும், தாராபுரம் தாசில்தாருமான ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணம் தாராபுரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவில் ரொக்கப் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *