தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு வந்த அவர், சுருளி ஆற்றங்கரை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குவியல், குவியலாக கிடந்த பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே தூய்மை செய்யப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலையை பார்வையிடுவதற்காக நேற்று சுருளி அருவிக்கு வந்தார். அப்போது சுருளி ஆற்றிலும், ஆற்றின் கரையோரங்களிலும் மீண்டும் குப்பைகள், பழைய துணிகள் உள்ளிட்டவை ஆங்காங்கே கிடந்து அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:
சுருளி அருவி புனிதமான புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில் ஏற்கனவே தூய்மை செய்யப்பட்ட இடங்கள் மீண்டும் குப்பைகள் நிறைந்து அசுத்தமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே, சுருளி அருவிக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணியும் அருவி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள பொறுப்புடன் செயல்பட வேண்டும். அருவிக்கு வந்து செல்லும்போது கொண்டு வரும் துணிகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும். இதன் மூலமே சுருளி அருவி பகுதியை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க முடியும்.
மேலும், சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் சுருளி அருவிக்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிதி எந்தெந்த பணிகளுக்கு செலவிடப்படுகிறது என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுருளி அருவி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசுவதை தவிர்க்க முடியும்.
எனவே, போர்க்கால அடிப்படையில் சுருளி அருவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் விரைவாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்களோ, அந்த அளவுக்குத்தான் சுருளி அருவியை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க முடியும்.
இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா கூறினார்.