திருவாரூர்., செப். 10

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் பயன்படுத்தப்படும் பல்வேறு மீட்பு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர்கள் அந்த உபகரணங்களை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவற்றை காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மதியம் சுமார் 1 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கடுமையான வெயில் நிலவிய நிலையிலும், நீண்ட நேரம் காத்திருந்த பணியாளர்களுக்கு போதிய ஓய்வு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மொட்டை வெயிலில் நின்றபடி அமைச்சர்களின் வருகைக்காக அவர்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஸ்ரீநாத், விஸ்வநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது தங்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் நீண்ட நேரமாக காத்திருந்த பணியாளர்களை பார்வையிடாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்களின் வருகைக்காக பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டு அமைச்சர்களின் பார்வைக்காக காத்திருந்ததாகவும், அவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பணியில் முக்கிய பங்காற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பணியாளர்களை நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கச் செய்ததுடன், அவர்களின் பணியையும் உழைப்பையும் அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதாக கூறப்படுவது, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மத்தியில் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பேரிடர் காலங்களில் முன்களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய மரியாதையும், அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆய்வு நிகழ்ச்சிகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கச் செய்யப்படும் பணியாளர்களின் நலனில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *