​கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும் விமரிசையாக நடந்து முடிந்தது. தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவத்தையும், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் காலத்தால் அழியாத வாழ்வியல் கருத்துகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கில் இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.


​தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மையங்களில் இருந்து 3 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 50,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் ஒன்றுதிரண்டு திருக்குறளை மிகத் துல்லியமாகவும் ஒருசேர உரத்த குரலிலும் முற்றோதல் செய்தனர். மாணவர்களின் இந்த பிரம்மாண்டமான திருக்குறள் பாராயணம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியதோடு, “வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டன்” (World Book of Records London) உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.


​இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25-வது குரு மகாசன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரை வழங்கி ஆசிர்வதித்தார். அவருடன் இணைந்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. V. சம்பத் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவர்களின் சாதனையைப் பாராட்டி உரையாற்றினார்.

மேலும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் திருமதி சீமா போப்பனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
​லண்டன் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்ட்டர்ட் அதிகாரிகளான திருமதி அங்கிதா ஷா மற்றும் திரு. ரவி ஆகியோர் நிகழ்வை நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கையையும் முற்றோதல் துல்லியத்தையும் ஆய்வு செய்து, இந்த உலக சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்து சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்த திருக்குறள் திருவிழா பெரும் வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *