தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின.

தமிழ்மொழி, இலக்கியம், வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதோடு, அவர்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும் இப்பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. வேலுசாமி தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் DNC மணிவண்ணன், துணைத் தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் Dr. S. ராம்குமார், நிர்வாக அலுவலர் கா. விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, தமிழ்த்துறை சார்பில் பெ. மோனிஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, சே. மோகன் மற்றும் புவனேஷ்வரி இருவரும் தொடக்கவுரை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை ஜோ. ஜெயப்பிரியா, தே. தர்ஷிணி, சே. வினுஷா ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

கவித்தேடல் பதிப்பகத்தின் நிறுவனர் கோகுல் காளியப்பன் அவர்கள், பதிப்பகத்தின் பயணம் மற்றும் முதன்முறை எழுதத் தொடங்குவது பற்றி சிறப்புரையாற்றினார்.

மேலும், “வாசிப்பை நேசிப்போம்” என்ற தலைப்பில் நல்லாசிரியர் கூத்தப்பாடி மா. பழனி அவர்கள், மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பல்வேறு வகையான நூல்களை வாசிக்க வேண்டும் என்றும், “கைப்பேசியை விடுங்கள்; புத்தகத்தை எடுங்கள்” என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மொழித்திறன், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவை மேம்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நல்லாசிரியர் தமிழ்மகன் ப. இளங்கோ, சிறப்புத் தலைவர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு சங்கம், சிறப்புரையாற்றினார். மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிந்தனைகளை எழுத்தின் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் வழங்கிய சிறப்புப் பயிற்சி மாணவர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதற்கான அடிப்படைகள், ஒரு படைப்புக்கான கரு தேர்வு, கருத்தை வாசகர்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்துதல், சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

பயிற்சிப்பட்டறையின்போது, மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் விளக்கமளித்தனர். மாணவர்கள் தங்களது படைப்புகளை உருவாக்கவும், அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்களின் அறிவுத்திறன், வாசிப்புத் திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறை பயனுள்ளதாக அமைந்தது.

“தமிழை வாசிப்போம்; சிந்திப்போம்; படைப்போம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு புதிய திசையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

நிறைவாக, த. அர்ச்சனா நன்றியுரை வழங்கினார். த. கிருத்திகா, கே. முகுந்தவள்ளி ஆகிய இரு மாணவிகளும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *