நாகப்பட்டினம்,செப்.14-
திட்டச்சேரி-குத்தாலம் இடையே பிராவடையான் ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த பாலம்
திட்டச்சேரி-குத்தாலம் இடையே பிராவடையான் ஆற்றின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழையபாலம் உள்ளது. இந்த பாலமானது குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், உத்தூர், துறையூர், சுள்ளாங்கால், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாகவும், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று வரவும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கண்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து நாள்தோறும் கச்சா எண்ணெய் ஏற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் பாலம் வழியாக சென்று வருகிறது.
இடித்து அகற்ற வேண்டும்
தற்போது இந்த பாலம் சேதமடைந்து உள்ளது. அதாவது பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.