விநாயகர் சதுர்த்தி விழா-துறையூரில் விதி மீறி வைத்த சிலையை வட்டாட்சியர் கையகப்படுத்தினார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாட்சியர் சித்ரா தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் ஐந்து இடங்களில் அரசு விதிமுறைகளை மீறி பத்து அடிக்கு மேல் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சித்ரா மற்றும் முசிறி டிஎஸ்பி சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் 13/09/2026 மாலை 5 மணி அளவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 80 இடங்களிலும், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 40 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் நாடு அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் ஐந்து இடங்களில் பத்து அடிக்கு மேல் சிலையின் உயரம் இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் என்று முசிறி டிஎஸ்பி சச்சிதானந்தம் அறிவுறுத்தி பேசினார்.
அப்போது 4 சிலைகளின் உயரங்களை தாங்களே குறைத்து விடுவதாகவும், ஒரு சிலை மட்டும் 19 அடி உயரம் இருப்பதால் அதன் உயரம் குறைக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறினர்.அதனால் அந்த சிலையை மட்டும் வருவாய் துறையினர் கையகப்படுத்தி தனி இடத்தில் வைத்து காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த சிலையை வைக்க முடியாமல் போவதால் அந்த சிலை அமைப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.இதில் காவல் ஆய்வாளர்கள் துறையூர் முத்தையன்(பொ) , உப்பிலியபுரம் காவல் ஆய்வாளர் மாரிமுத்து , உதவி காவல் ஆய்வாளர்கள் தினேஷ், ராஜதுரை, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்து செல்வன் மற்றும் முதுநிலை காவலர்கள் மாணிக்கம், பாலகிருஷ்ணன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ராமு, ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் இளவரசி, கிராம நிர்வாக அலுவலர் பொன்மலர்,சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்