திருவாரூர்., செப்.14.-
திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியை
மெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த வெள்ளி கோள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு வானில் அரங்கேறிய இந்த அற்புத காட்சி ஒருபுறம் மெல்லிய பிறை நிலவு… அதற்கு அருகில் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்த வெள்ளி கோள்…
இரண்டும் ஒன்றையொன்று நெருங்கிய நிலையில் காட்சியளித்ததால், வானமே ஒரு அழகிய ஓவியம் போல காட்சியளித்தது.
வெள்ளி கோளின் அபரிமிதமான பிரகாசம், பிறை நிலவுக்கு அருகில் வைரக்கல் பதித்தது போன்று தோற்றமளித்தது. இந்த அரிய வானியல் நிகழ்வை காண திருவாரூர் நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை , திருத்துறைப்பூண்டி, வண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் தங்களது வீட்டு மொட்டை மாடிகளிலும், திறந்தவெளிகளிலும் நின்று வானை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர்.
பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, வானில் நிகழ்ந்த இந்த அரிய காட்சியை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
வெள்ளி கோள் வழக்கமாகவே இரவு வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் கோளாக இருந்தாலும், குறிப்பிட்ட வானியல் அமைப்புகளின் காரணமாக அதன் தோற்றம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
மேலும், வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளி கோள் அதிகபட்ச பிரகாசத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நாளையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
பிறை நிலவும்… அதற்கு அருகே வைரக்கல் போல ஜொலித்த வெள்ளியும்…திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இன்று மாலை வானமே ஒரு கண்கொள்ளாக் காட்சியாக மாறியது.