மன்னார்குடி .,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகத்தின் சார்பில் வயல் விழா மற்றும் விவசாயிகள்–விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்குனர் கார்த்திகேயன், சிங்கப்பூர் உயிர் அறிவியல் ஆக்சிலரேட்டர் அமைப்பைச் சேர்ந்த கோஹ் பூ வேயி, உயிர் அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த கிங்ஸ் வர்கீஸ், ஸ்ரீநிவாசன் ராமச்சந்திரன் உள்ளிட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வயல் விழாவையொட்டி, விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்ற விஞ்ஞானிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் சாகுபடி முறைகள், பயிர்களின் வளர்ச்சி, மண்ணின் தன்மை, நீர் பயன்பாடு, உர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தனர்.

குறைந்த நீரில் அதிக உற்பத்தி

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நவீன நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, ‘பாய்ச்சலும்–காய்ச்சலும்’ முறையை கடைப்பிடிப்பதன் மூலம் நெல் சாகுபடியில் நீர் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்து, பயிருக்கு தேவையான அளவு மட்டுமே நீரை பயன்படுத்தி நல்ல மகசூல் பெற முடியும் என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும், வயலில் தொடர்ந்து தண்ணீரை தேக்கி வைப்பதைத் தவிர்த்து, பயிரின் தேவைக்கேற்ப நீரை பாய்ச்சி, பின்னர் வயலை காயவிட்டு மீண்டும் தேவையான நேரத்தில் நீர் பாய்ச்சும் முறையை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் நீர் சிக்கனத்தை ஏற்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் விளக்கினர்.

மண் வளத்தை பாதுகாக்க உர மேலாண்மை

மண்ணின் வளத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மண்ணின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மண்ணில் இயற்கையாக காணப்படும் நுண்ணுயிரிகளின் பயன்பாடு, நுண்ணுயிர் கலவைகளை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் உயிர்ச்சத்து மற்றும் வளத்தை மேம்படுத்துவது, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சரியான முறையில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.

விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல்

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விவசாயிகள்–விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது வயல்களில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விஞ்ஞானிகளிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பினர்.

நெல் பயிரில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடுகள், நீர் மேலாண்மை, உரமிடும் முறை, மண் வளம் குறைதல், நுண்ணுயிர்களின் பயன்பாடு, பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.

100 ஹெக்டேரில் தொழில்நுட்பம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகம் இணைந்து மேற்கொண்ட திட்டத்தின் கீழ், சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் தாளடி மற்றும் கோடை சாகுபடியில் பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் சிக்கனமான நீர் பயன்பாடு, கட்டுப்படுத்தப்பட்ட உரமிடுதல், மண்ணின் தன்மைக்கு ஏற்ப உர மேலாண்மை, நுண்ணுயிர் கலவைகளை பயன்படுத்துதல் மற்றும் பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை தேர்வு செய்தல் போன்ற தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்ததன் மூலம் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்துவதுடன், தண்ணீர் பயன்பாட்டையும் குறைத்து, நல்ல மகசூலை பெற முடிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் செயல்படுத்த கோரிக்கை

காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் சாகுபடி செலவு விவசாயிகளுக்கு சவாலாக உள்ள நிலையில், குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் இதுபோன்ற நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பாய்ச்சலும்–காய்ச்சலும் நீர் மேலாண்மை முறை, அறிவியல் அடிப்படையிலான உர மேலாண்மை, நுண்ணுயிர் தொழில்நுட்பம் மற்றும் பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை பயன்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் கொண்டு செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் மூலம் தண்ணீர் வளத்தை பாதுகாப்பதுடன், சாகுபடி செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *