மதுரை மாநகராட்சி 61 வது வார்டு மகபூபாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது. அருகிலேயே மாநகராட்சி குடிநீர் சிண்டெக்ஸ் தொட்டி செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சாலைக்கு வந்த குப்பைகளை மேய வரும் கால் நடைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு சாலையில் போய் வரும் பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. குப்பையை அள்ள போதுமான வாகனங்கள் இல்லை. மேலும் இருக்கும் வாகனங்களும் பழுது, மாற்று ஓட்டுநர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் குடியிருப்புகள் முதல் தெருக்கள், சாலைகளில் சரியான நேரத்துக்கு குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும், வாகனங்கள் பழுது, போதுமான வாகனங்கள் இல்லாததால் வீடுகள் முதல் தெருக்கள், சாலைகளில் குப்பையை சேகரித்து மாநகராட்சியால் உரக்கிடங்கிற்கு அனுப்ப முடியவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நலப் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், “வாகனங்கள் காலை 6 மணிக்கு குப்பையை அள்ளும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், தாமதமாகச் செல்வதால் மாநகரில் சேரும் குப்பையை சரியான நேரத்துக்கு அகற்றி உரக்கிடங்குக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தினமும் 800 மெட்ரிக் டன் குப்பை மட்டும் அள்ளப்படுவதால் மீதமுள்ள குப்பை நகர் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.” என்றனர்.