கோவை

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் அருண் கார்த்தி, நூற்பாலைகளில் இயந்திர நவீனமயமாக்கல் மற்றும் மின்சார சேமிப்பு தொடர்பான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு 25 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நூற்பாலைகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் முக்கிய பருத்தி வர்த்தக மையங்களில் இந்திய பருத்தி கழகத்தின் சேமிப்பு கிடங்குகளை அமைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பருத்தி விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்கி பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தரமான பருத்தி அதிக அளவில் கிடைத்தால் நூற்பாலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதுடன், தொழில்துறையின் வளர்ச்சிக்கும் அது உதவும் என்றும் கூறினார்.

மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நேரடி மற்றும் மறைமுகமான அனைத்து மின்சாரக் கட்டணங்களையும் உயர்த்தாமல், நிலையான மின்சாரக் கட்டணக் கொள்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் சார்பில் வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *