தென்காசி,
பாம்புக்கடி தடுப்பு மற்றும் முதலுதவி குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஜெஸ்லின் மற்றும் இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர் பிரமலதா ஆகியோர் தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாம்புக்கடி ஏற்பட்டால் பதற்றமடையாமல், பாம்பு கடித்த கையையோ காலையோ அசைக்காமல் வைக்க வேண்டும், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், பாம்புக்கடி ஏற்பட்ட இடத்தில் கட்டு போடுதல், காயத்தை வெட்டுதல், விஷத்தை வாயால் உறிஞ்சுதல் போன்ற தவறான முதலுதவி முறைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், பாம்புகளை கண்டால் அவற்றை கொல்லாமல், பாதுகாப்பாக விலகிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பாம்புக்கடி உயிருக்கு ஆபத்தானது என்றாலும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து “பாம்புக்கடி தடுப்பு – உயிரைக் காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் மருத்துவமனை வளாகம் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாம்புக்கடி தடுப்பு மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்..