மன்னார்குடி., செப். 19-
மேக்கேதாட்டுவில் அணை அமைக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், ராசிமணலில் அணை கட்டுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பூம்புகாரில் இருந்து பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கினைப்புகுழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தால் அப்போது அவர் கூறியதாவது:….
காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து எனது தலைமையில் செப்டம்பர் 20-ஆம் தேதி பிரசாரப் பயணம் தொடங்குகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒகேனக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை வழியாக செல்லும் இந்தப் பயணம் செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை திருவாரூரில் நிறைவடையும்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செப்டம்பர் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பிரசாரப் பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் அடிப்படையில் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் நிலைமை மேலும் சிக்கலடைந்துள்ளது.
மேட்டூர் அணையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை ஆறுகளில் முழுமையாகச் சென்றடையவில்லை. எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் உள்ள நீர் இன்னும் ஓரிரு வாரங்களில் குறைந்து அணையை மூட வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே நேரடி விதைப்பு மற்றும் குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்து வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று என இவ்வாறு அவர் தெரிவித்தார்.