ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம்

கொரடாச்சேரி., செப். 19.-

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளதுடன், அதன் சுற்றுப்புறம் குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அம்மையப்பன் கடைத்தெரு, மீன் அங்காடி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்லும் பெண்களின் பயன்பாட்டுக்காக இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இதில் 10 கழிவறைகள் மற்றும் 2 குளியல் அறைகள் உள்ளன.

பெண்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்த இந்த வளாகம், கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடை அம்மையப்பன் பகுதியில், மகளிர் சுகாதார வளாகம் அருகே மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மதுபானக்கடையுடன் பார் செயல்படுவதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், படிப்படியாக பயன்பாடு குறைந்து தற்போது வளாகம் பூட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மதுபானக் கழிவுகள்

பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், குடிநீர் கோப்பைகள், அட்டை பெட்டிகள் உள்ளிட்ட கழிவுகள் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம், அதன் நோக்கத்துக்கு பயன்படாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து, சுகாதார வளாகத்தை தூய்மைப்படுத்தி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகாதார வளாகம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *