மொபைல் போன் தொழில் செய்து வணிக லாபம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி.-வி.ஏ.ஓ. மீது
எஸ்.பி.யிடம் புகார்
தஞ்சாவூர், அக்- 11.
தஞ்சாவூர் மொபைல் போன், கார் வாங்கி விற்கும் தொழில் செய்து லாபம் ஈட்டுவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு என்கிற கணேஷ் வயது-39. மற்றும் தஞ்சை சீனிவாசபுரம் சிங்கப்பெருமாள்
குளம் ஆண்டவர் நகர் மேல்கரையைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது-21 ஆகிய இருவரும் தஞ்சை மாவட்ட
எஸ்.பி. சுந்தரவதனத்திடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவையாறு, ராஜேந்திரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருக்கும் அபிஷேக். தஞ்சையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு அடிக்கடி வந்து செல்வார்.
அப்போது எங்கள் இருவருக்கும் அபிஷேக் அறிமுகமானார். இந்த அறிமுகம் காரணமாக எங்கள் இருவரிடமும் மொபைல் போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று வி.ஏ.ஓ. அபிஷேக் கூறினார்.
இதனை நாங்கள் இருவரும் நம்பி ஒரு சிறு தொகையை அபிஷேக்கிடம் கொடுத்து முதலீடு செய்தோம்.அப்போது கிடைத்த லாபத்தில் எங்களுக்கும் அபிஷேக் பங்கு கொடுத்தார். இதனால் அபிஷேக் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.
இதனால் அபிஷேக் யாருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த சொல்கிறாரோ, அவர்களுடைய வங்கி கணக்குக்கும், நேரடியாகவும் சுமார் ரூ. 68 லட்சம் வரை
பணம் கொடுத்துள்ளோம்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அபிஷேக் வழக்கம்போல் லாபமும் கொடுக்கவில்லை. எங்களிடம் வாங்கிய பணமும் கொடுக்கவில்லை.இது குறித்து பலமுறை அபிஷேக்கிடம் நாங்கள் கேட்டோம். பணம் தரவில்லை என்றால், உங்கள் மீது போலீசில் புகார் கொடுப்போம் என்று கூறினோம்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் கடந்த மாதம் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு வழக்கம்போல் வரும் நகை கடைக்கு வந்து எங்கள் இருவரையும் தாக்கி கடையை சேதப்படுத்தினார்.
அப்போது எங்களை தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.
இது குறித்து நாங்கள் இருவரும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அபிஷேக் மீது போலீசார் எடுக்கவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட எங்கள் இருவருக்கும் நாங்கள் கொடுத்த பணத்தை அபிஷேக்கிடம் இருந்து வாங்கி தர வேண்டும்.எங்கள் உயிருக்கும், நகை கடைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
குறிப்பாக ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இது போன்ற பண மோசடியில் ஈடுபடும் அபிஷேக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.