தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், அக்- 10. தஞ்சாவூர் பழைய வல்லம் சாலையில் இயங்கிவரும் பல் நோக்கு தனியார் மருத்துவமனை A to Z -ல் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் பங்குதாரர்கள் இருவரும் ஒரே நாளில் புகார் கொடுத்துள்ளனர். பங்குதாரர்களில் ஒருவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிசிஆர் உள்பட 3 பிரிவுகளில் மற்றொரு பங்குதாரரான சரவணன், அவரது சித்தப்பா பாஸ்கரன், மருத்துவமனை மேலாளர் பாஸ்கர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அன்றே போலீசார் சரவணனிடம் இருந்து மருத்துவமனையை கைப்பற்றி மற்றொரு பங்குதாரர் இராமசாமி மனைவி ஜெயஸ்ரீயிடம் கொடுக்க முயற்சி செய்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் காவல்துறை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். ஆகவே அவர் மீதும், அதற்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க புகாரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிடக் கோரி சரவணன் டிஜிபியிடம் கொடுத்த மனு கடந்த மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அந்த புகார் குறித்து தஞ்சை சிபிசிஐடி போலீசார் ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் புகார்தாரர் சரவணன் கொடுத்த வாக்குமூலத்தில், ‘எங்கள் மீதான புகார் பதிவான நிலையில் தஞ்சை வந்த காவல்துறை தலைவர் 3 நாட்கள் தங்கி இருந்து சமரசம் பேசுவது போல பேசி ரூ.5 கோடி வரை பணம் பறித்துள்ளார். பணமாகவும், காசோலையாகவும் கொடுத்ததாக’ கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் எல்லாம் தஞ்சை டிசிபி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து தான் நடந்தது. அவர் மூலமே பரிமாற்றங்களும் நடந்தது என்று கூறியுள்ளார். தொடர்ந்து 9-10-26 அன்று காலை ஆய்வாளர் சுகுமாறன் வீட்டிற்குச் சென்ற சிபிசிஐடி போலீசார் சுகுமாறனிடம் மாலை வரை விசாரணை செய்து பல ஆவணங்களையும் ஆதாரங்களையும் கைப்பற்றியதுடன் ஆய்வாளர் சுகுமாறனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டதையடுத்து திடீரென ஏதோ சொல்லிக்கிட்டே தனக்கு நெஞ்சுவலி என்று ஆய்வாளர் கூறி மயங்கி சரிந்தள்ளார், அவரை போலீசார் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் 10-10-26 அன்று அவரிடம் விசாரணை செய்த தஞ்சாவூர் முதலாவது கூடுதல் நீதிபதி குமரேசன் வரும் 29-10-2026 முதல் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், யாருக்காக பணப்பறிமாற்றம் நடந்தது என்று ஆய்வாளர் கூறியுள்ளதால் விரைவில் காவல் உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை பாயும் என்கின்றனர் போலீசார். .