கோயம்புத்தூர் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியில் மாணவர்களின் தொழில்முனைவோர் சிந்தனையை வளப்படுத்தும் நோக்கில், ‘மிஷன் ஒன்’ தொழில் முனை வோர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வு இளை ஞர்களிடையே வேலை தேடுவோரிலிருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குபவராக மாறவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதாக அமைந்தது. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வினைக் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப்பிரிவு, ரோட்டரி அமைப்பு மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

இந்நிகழ்வில், கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி கலந்துகொண்டு, வெற்றியின் பாதையில் தடம்பதிப்பதற்குக் கடின உழைப்பு அவசியம் எனக்கூறித் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா, உயர்ந்த இலட்சியம், புதிய சிந்தனை, சாதிக்கும் மனப்பான்மை இம்மூன்றும் இளைஞர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் எனக்கூறி நிகழ்வில் கலந்துகொண்டோரை வரவேற்றார்.

கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கவிதாசன் , மாணவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனை வோருக்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறிச் சிறப்புரையாற்றினார்.

அவரைத்தொடர்ந்து, ரோட்டரி பொதுமக்கள் தொடர்புப்பிரிவுத் தலைவர் எஸ்.கோகுல்ராஜ் மற்றும் 2026- 2027 ஆண்டிற்கான ரோட்டரி உதவி நிர்வாகி பால்வில்லியம் ஆகியோர் உரையாற்றினர். அவர்தம் உரைகளில், போலியோவை ஒழிப்பதன் அவசியம், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் முதலியவற்றை எடுத்துரைத்தனர். அதன்பின், ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப்பின் நிறுவனர் எம். சசிகுமார் இளைஞர்கள் தொழிற்துறையில் வெற்றி பெறுவதோடு, சமூகப்பொறுப்புடன்
செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் நிறைவாக, மாபெரும் தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்டது. இளைஞர்களிடையே தொழில்முனைவோராக வேண்டும் எனும் தன்னம்பிக்கையை விதைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *