“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை உடனே அமல்படுத்துக” – கோவையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
தி.மு.க பாணியில் த.வெ.க அரசும் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு : மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி!
நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் இன்று கோவை, சிவானந்தா காலனி, பவர்ஹவுஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முக்கிய விவரங்கள்:
இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்டக் கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திரளானோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றிய இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் J.S. கிஷோர் குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது:
வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது.உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்குத் தடை எதுவும் விதிக்கப்படாத நிலையிலும், அரசு அதனைச் செயல்படுத்தாமல் தாமதிப்பது கண்டிக்கத்தக்கது.
சின்னச், சின்னக் கோயில்களை இடிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகளை மிகத் தீவிரமாகச் செயல்படுத்தும் அதிகாரிகள், ஆன்மிகம் சார்ந்த இந்த விஷயத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக ஓரவஞ்சனையாகச் செயல்படுகின்றனர்.
முந்தைய தி.மு.க அரசைப் போலவே தற்போதைய த.வெ.க (TVK) அரசும் இந்துக்களுக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அரசு இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை சில கோயில்களில் ஆகம விதிகள் உண்டு, சிலவற்றில் இல்லை எனப் பிரிவினைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையற்றது.
சிறு கோயிலாக இருந்தாலும், பெருங்கோயிலாக இருந்தாலும் அனைத்து இந்துக் கோயில்களுமே ஆகம விதிகளுக்கு உட்பட்டவை தான். அறநிலையத் துறை அதிகாரிகள் தவறான வழிகாட்டுதலை அளிப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.
கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், கோட்ட செயலாளர்கள் உருவை பாலன், குணா, மாவட்ட பொதுச்செயலாளர் M. ஜெய்சங்கர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன், செல்வா, சதீஷ், ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்துரு உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபக் காட்சியை நேரில் காண அனைவரும் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.