மாவீரர் மக்கள் கழகத் தலைவர் எம்.கே. பாஸ்கரன் ஆட்சியரிடம் மனு

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை உடனடியாகத் திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவீரர் மக்கள் கழகத் தலைவர் எம்.கே. பாஸ்கரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் ஏற்கெனவே இயங்கி வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) திட்டத்தின் கீழ், 2019–2020 ஆம் ஆண்டில் ரூ.6 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையிலும், அரசின் மெத்தனப் போக்கால் கட்டடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

உயிர் காக்கும் மருத்துவச் சேவைக்காகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், பயன்பாட்டுக்கு வராமல் செயல்பாடற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய படுக்கை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது பொதுமக்களின் நலனுக்கு எதிரானதுடன், மக்கள் வரிப்பணத்தையும் வீணடிக்கும் செயலாகும்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தைத் திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இக்கோரிக்கையின் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பொதுமக்களுக்கு ஆதரவாக மாவீரர் மக்கள் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எம்.கே. பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்த மனு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பள்ளப்பட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிக் அலி, ஷாஜகான், அன்வர் அலி, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *